வணிக பின்புலத்தில் இருந்து வரும் மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் மேலாண்மை படிப்பாக எம்பிஏ பைனான்ஸ் படிப்பு விளங்குகிறது. வங்கியியல் மற்றும் வணிக செயல்பாடுகள் உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதற்கு அதிக பணியாட்கள் தேவைப்படுகிறார்கள். எனவே, எம்பிஏ படிப்பவர்களின் பிரதான தேர்வாக இப்படிப்பு திகழ்கிறது.
தகுதிகள்:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை குறைந்த பட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் எம்பிஏ பைனான்ஸ் படிப்பில் சேர தகுதியானவர்கள். எம்பிஏ., பட்டப்படிப்பை வழங்கும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், பைனான்ஸ் ஸ்பெஷலைசேஷன் படிப்பை கட்டாயமாக கொண்டுள்ளன.
சில கல்வி நிறுவனங்கள் CAT தேர்வு மதிப்பெண்களுடன், குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் மாணவரின் செயல்பாட்டையும் கணக்கில் எடுக்கின்றன. அதேசமயம் வேறு சில கல்வி நிறுவனங்கள் XAT, GMAT போன்ற தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.
புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் எம்பிஏ சேர வேண்டுமெனில் உங்கள் படிப்பு சம்பந்தப்பட்ட பணி அனுபவத்தை பெற்றிருக்க வேண்டியது தேவையாகிறது. மேலும், பல கல்வி நிறவனங்கள் தகுதியான மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டங்களையும் வழங்குகின்றன.
தேசிய அளவில் எம்பிஏ பைனான்ஸ் படிப்பை வழங்கும் சில முக்கிய கல்வி நிறவனங்கள்
லிம்ஸ் அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா, லக்னோ, நர்சீ மோன்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்டடீஸ் மும்பை, சிம்பியோசிஸ் சென்டர் பார் மேனேஜ்மென்ட் அண்ட் ஹூயூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் புனே, மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் குர்கான், சேவியர் லேபர் ரிலேசன் இன்ஸ்டிடியூட் ஜாம்ஷெட்பூர், ஸ்பெயின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் மும்பை, இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் ஐதராபாத்.
மேலும், இப்படிப்பை தொலைநிலைக்கல்வி முறையில் கற்பதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், இப்படிப்பை வெளிநாட்டில் மேற்கொள்ள விரும்புவோருக்கு அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள மேலாண்மை பல்கலைகள் முக்கியமானவை ஆகும்.
கற்றுக் கொள்வது என்ன?
இப்படிப்பில் பைனான்சியல் செக்டார் மற்றும் பைனான்சியல் மார்க்கெட் பற்றி பலவேறு அம்சங்கள் அடங்கிய ஒரு விரிவான படிப்பை மேற்கொள்கிறார்கள். வகுப்பறை படிப்புக்கு அப்பால், எண்கள், பகுப்பாய்வு, நிதி, நுணுக்க சிந்தனையை மேம்படுத்துதல், மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் போன்றவற்றை கற்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இதன் மூலம் நீங்கள் படிப்பை முடித்து நிதித்துறையில் ஈடுபடுகையில் ஒரு திறன் வாய்ந்த நிபுணராக பரிணமிக்க முடியும். கெஸ்ட் லெக்சர்கள், தொழில்துறை மற்றும் பாடரீதியான நிபுணத்துவம் பெற்ற நபர்களுடனான கலந்துரையாடல், இன்டன்ஷிப் மற்றும் பயிற்சி திட்டங்கள் போன்றவை படிப்பின் போதே ஒரு மாணவருக்கு கிடைக்கின்றன. இதன்மூலம் ஒரு நடைமுறை சவாலை சந்திப்பதற்கு தயார் படுத்தப்படுகிறார்.
படிப்பின் நன்மைகள்:
இப்படிப்பு உங்களை ஒரு நிதி வல்லுநராக மாற்றுகிறது. இந்த 2 வருட விரிவான படிப்பில், உங்களுக்கு விருப்பமான பிரிவை, பட்டம் பெற்றதும் உங்களால் தேர்ந்தெடுக்க முடியும். இப்படிப்பு உங்களை ஒரு எதிர்கால தலைவர் என்ற நிலைக்கும் உயர்த்துகிறது. பைனான்ஸ் என்பதுதான் ஒரு தொழில் நிறுவனத்தின் செயல்பாட்டு ஆதாரம். எனவே, இப்பிரிவுடன் தொடர்புடைய பட்டதாரிகள், ஒரு நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறார்கள்.
பலவிதமான எம்பிஏ பிரிவுகளுடன் ஒப்பிடுகையில் பைனான்ஸ் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. ஏனெனில் நிதி தொடர்பான அறிவு குறைவாக பெற்றிருக்கும் ஒருவர் ஒரு நிறுவனத்தின் மேல் பொறுப்பிற்கு வருகையில் மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படும். எனவே தான், எம்பிஏ பைனான்ஸ் படிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
பணியின் தன்மைகள்:
இந்தப் படிப்பு உடனடியாக ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு படிப்பதாகும். இப்படிப்பை முடித்தவுடனேயே நல்ல சம்பளத்தில் வேலை பெறும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதேநேரம் போட்டிகளும் அதிகம். நிதித்துறை சம்பந்தப்பட்ட பணிகள் அந்தந்த நேரத்தின் பொருளாதார சூழல்கள் சம்பந்தப்பட்டது.
ஒவ்வொரு நேரத்தின் பொருளாதார ஏற்ற இறக்கங்கள், இப்பணியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் ஏற்படும் எந்த தாக்கமும் இப்பணியில் உள்ளவர்களால் உடனடியாக உணரப்படும். சமீப காலங்களில், இப்படிப்பு தொடர்பான பணிகளை பெறுவதற்கு போட்டிகள் அதிகரித்துள்ளன.
மேம்பாட்டுக்கான உத்தரவாதம்:
உலகம் முழுவதுமுள்ள நிதி சந்தைகள் அவ்வப்போது மாறி வருகின்றன. இத்தகைய மாற்றங்களுடன் ஒத்துப்போய் அதை திறம்பட சமாளிக்கும் திறன்படைத்த நிபுணர்கள் தான் இன்றைய தேவை. இத்தகைய நிபுணர்களை உருவாக்குவதற்கான ஆயத்தப்பணிகள், கல்லூரி நிலையிலேயே தொடங்கப்பட்டு விட வேண்டும். எனவே, எம்பிஏ பைனான்ஸ் படிப்பை இன்னும் சில படிகள் மேம்படுத்த வேண்டியுள்ளது.
தொழில்துறையில் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்கும் வகையில் தேவைப்படும் நேரத்தில் இப்படிப்பின் பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றை பயன்படுத்துவதோடு நவீன பயிற்சிகளும் அவசியமானவை. இத்தகைய அம்சங்கள் கல்வித்துறைக்கு கட்டாயம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
Source-dinakaran
Post Your Comments for this News
Related Articles